தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராம், தற்போது இயக்கியுள்ள புதிய படம் ‘பறந்து போ’ ஜுலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், ஒரு பீல் குட் கதையாக உருவாகியுள்ளது. அப்பா மற்றும் மகனுக்கிடையேயான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட இந்தக் கதை, சுதந்திரத்தை விரும்பும் சிறுவனின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.
படம் குறித்த விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் தளத்தில் ‘பறந்து போ’வின் முன்னோட்டத்தைப் பார்த்த பிறகு கூறிய கருத்துகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. “இயக்குநர் ராம் அருமையாக இயக்கியுள்ள இப்படம் என் மனதை கவர்ந்தது. எமோஷனும், காமெடிக்கும் இடையே சரியான சமநிலை. இந்த படம் உங்கள் மனதில் நிலையாக இருக்கும்,” என புகழ்ந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், பல சினிமா பிரபலங்களும் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவில் கலந்து கொண்டு தங்கள் பாராட்டுகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்கிறார்கள். இது படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
பொதுவாக ராம் படங்களுக்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இருப்பார். ஆனால் இப்படத்தில் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன், பிசியான காரணத்தால் பாடல்களுக்குப் பதிலாக பின்னணி இசை மட்டும் செய்துள்ளார்.
‘பறந்து போ’ ரிலீஸுக்கு தயாராகும் நிலையில், ராமின் மற்றொரு படமான ‘ஏழு கடல் ஏழு மலை’ இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்த அந்த படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த வகையில், ‘பறந்து போ’ படமும், ஏற்கனவே அமைந்துள்ள ராமின் ரசிகர்கள் கூட்டத்தினையும், குடும்ப ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.