சென்னை: நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை தொடங்கிய பின், அவருக்கு கிடைக்கும் ஆதரவும் எதிர்ப்பும் சமமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து, ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் பேசிக்கொண்டிருக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

விஜய் கட்சி இதுவரை இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. ஆனால், “விஜய் தனது பேச்சுகளில் கொள்கை சார்ந்த விஷயங்களை எடுத்துரைப்பதில்லை, சினிமா வசனங்களைப் போலவே பேசுகிறார்” என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதற்கிடையில், “மற்ற எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு, காவல்துறை மற்றும் அரசாங்க அழுத்தங்கள் விஜய் கட்சியைச் சூழ்ந்துள்ளன” என்று கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர், “தமிழ்நாடு அரசு விஜய் கட்சியைப் பார்த்து பயப்படுகிறதா அல்லது பயமுறுத்துகிறதா எனக்குத் தெரியவில்லை. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை” என்று பதிலளித்தார். இந்த கூற்று சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசு, மக்கள் ஆதரவைப் பெறும் நமது கட்சியை அஞ்சுகிறது. அதனால் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தோழர்கள்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமையை மதிக்காமல் பழிவாங்கும் அரசியல் நடக்கிறது. உடனடியாக வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இதனால், அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.