ஹைதராபாத்: “வணக்கம். நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னைப் பற்றியும், என் கணவர் பற்றியும் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கவே இந்த காணொளியை பதிவு செய்துள்ளேன். நான் பிஎச்டி, எல்எல்பி போன்றவற்றைப் படித்து வருகிறேன். இத்துடன், எனது இசைத் துறையிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் பல வருடங்களாக தூக்கமே வரவில்லை.
இதற்காக மருத்துவர்களை அணுகியபோது எனக்கு தூக்கமின்மை இருப்பது தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து சாப்பிட்டு வருகிறேன். சமீபத்தில், நான் வழக்கமாக உட்கொள்ளும் மருந்தின் அளவு சற்று அதிகரித்ததால், நுரையீரல் தொற்று ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்றேன். இப்போது நான் உயிருடன் இருப்பதற்கும் உங்களிடம் பேசுவதற்கும் என் கணவர்தான் காரணம். வெளிநாட்டில் இருந்தாலும், தகவல் கிடைத்ததும் முதலில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தார். அதனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தேன். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. என் வாழ்க்கையில் கடவுள் கொடுத்த நல்ல விஷயம் என்றால் அது என் கணவர் பிரசாத் பிரபாகரும், என் மகள் தயா பிரசாத்தும் தான். இந்த நேரத்தில், காவல்துறை, ஊடகங்கள், சக இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. விரைவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்,” என்றார்.
பின்னணி பாடகி கல்பனா, செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் சுயநினைவின்றி இருந்தபோது ஹைதராபாத் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக கல்பனா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மகள் மறுத்துள்ளார். அவர் புதன்கிழமை தனது தாயின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.