‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான கன்னட நடிகர் யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘தி டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து நித்தேஷ் திவாரியின் ‘ராமாயணம்’ படத்தில் ராவணனாக நடிக்கிறார் யாஷ். இதில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் நடிகர் யாஷின் மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக நடிகர் யாஷின் சம்பளம், படத்தின் விநியோகப் பங்கு உட்பட ரூ. 200 கோடி என்று செய்திகள் வெளியாகின.
இது உண்மையாக இருந்தால், இந்திய சினிமாவில் வில்லனாக நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை யாஷ் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஷாருக்கானைத் தவிர அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் ரூ.200 கோடிக்கு மேல் ஊதியம் வாங்குவதாக கூறப்படுகிறது.