துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 1950-களின் சென்னை மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பீரியட் டிராமாவாக தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். துல்கர் சல்மானுடன் சேர்ந்து, பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபேரர் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு ஒரு சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

துல்கர் சல்மானின் சமீபத்திய படமான ‘லோகா’வின் மிகப்பெரிய வெற்றியின் காரணமாக ‘காந்தா’ திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற ஆவணப்படத் தொடர் கடந்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் OTT-யில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தத் தொடரின் இயக்குனர் செல்வமணி செல்வராஜ். அவர் இப்போது ‘காந்தா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படும்.