புதுடெல்லி: ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலிகான், கரிஷ்மா கபூர், ரித்மா கபூர் சாஹ்னி, ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின், நீது கபூர் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.
பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின் போது, பாலிவுட் நடிகர்களுடன் மோடி கலந்துரையாடினார். நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

தாத்தா ராஜ் கபூரின் பெருமையை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு சிறப்பான சந்திப்புக்கு பிரதமருக்கு நன்றி. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தாத்தா ராஜ் கபூரின் கலைத்திறன், தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கொண்டாடும் இந்த நூற்றாண்டு விழா, வரும் தலைமுறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
‘ராஜ் கபூர் 100-வது திரைப்பட விழா’ மூலம் அவரை நினைவுகூர்வதிலும், இந்தியத் திரையுலகில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கும் சிறந்த திரைப்படங்களைத் திரையிடுவதிலும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.