சென்னை: நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் 15 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்பநல நீதிமன்றம், சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து சமரச மையத்தில் இருவரும் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வழக்கு நேற்று குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவியும், ஆர்த்தியும் நேரில் ஆஜராகினர்.
அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, சமரச பேச்சுவார்த்தையை இன்னும் முடிக்க முடியவில்லை என்றார். இதையடுத்து, ஜெயம்ரவியும், ஆர்த்தியும் சமரசம் மற்றும் நல்லிணக்க மையத்தில் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.