சென்னை: தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ஜன நாயகன் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை, கன்னட தயாரிப்பு நிறுவனம் KVN Productions மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறது.

அதே நிறுவனம் யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் ஆட்சியின் அதிகாரத்தை எதிர்த்து போராடி முதலமைச்சராக மாறுவது தான் கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த கதைம்சத்தில், பொதுச் செயலாளரின் முகத்தையும் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில் புஸ்ஸி ஆனந்தை நடிக்க வைக்க விஜய் திட்டமிட்டதாக பேசப்படுகிறது.
அதேபோல், விஜய்க்கு நெருக்கமான இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோரும் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன நாயகன் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்துக்குப் பிறகு அதிக கோடிகள் பிசினஸாகும் அடுத்த தமிழ்ப் படம் இதுவாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தளபதி விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகனைத் தேர்ந்தெடுத்து, அதற்காக 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேடைகளில் அவர் தொடர்ந்து “மக்களுக்காகப் பணியாற்றுவேன்” என்று கூறி வருவது, ரசிகர்களிடையே இன்னும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.