சென்னை: தமிழில் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில், தனக்குரிய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்த அஜித்குமார், தற்போது தனது குழுவினருடன் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். துபாயில் கார் பந்தயத்தில் பங்கேற்ற போது, அஜித்குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், பின்னர் போர்ச்சுகலில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்றிரவு ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது காரை முந்திச் செல்ல முயன்ற மற்றொரு கார் பலமாக மோதியது. இதில் அஜித்குமாரின் கார் 3 முறை மோதியது. இதில் சிக்கிய அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மோதிய காரில் இருந்து இறங்கிய அஜித் குமார், விரலை உயர்த்தி, ‘நல்லா இருக்கேன்’ என்றார். உடனே சென்னையில் உள்ள உதவியாளர்களிடம் செல்போனில் பேசிய அவர், ‘நல்லா இருக்கேன். எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்றார்.
அடுத்ததாக மார்ச் 1-ம் தேதி பார்சிலோனாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். பந்தய கார் எவ்வளவு பெரிய விபத்தில் சிக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், காரை ஓட்டி வரும் அஜித்குமார் அணியும் ஆடைகள் எந்த விபத்திலும் தீப்பிடிக்காத வகையிலும், உடல் உபாதைகள் ஏற்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித் குமார் இரண்டாவது முறையாக கார் விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளதால், அவர் கார் மோதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.