மும்பை: பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ்-தள கணக்கு பிப்ரவரி 13-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்த அவர், ‘எனது எக்ஸ்-தள கணக்கை மீட்டெடுக்க நான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. என்னால் அந்த கணக்கில் உள்நுழைய முடியாததால், அந்த கணக்கை தளத்தில் இருந்து நீக்க முடியவில்லை. எனவே, அந்தக் கணக்கிலிருந்து வரும் இணைப்புகள் அல்லது தகவல்களை நம்ப வேண்டாம்.

கணக்கை மீட்டெடுத்தால், அதை வேறு தளத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்ரேயா கோஷலின் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கோஷல் கூறும்போது, ’கடந்த பிப்ரவரியில் ஹேக் செய்யப்பட்ட எனது எக்ஸ்-தள கணக்கு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
AI-உருவாக்கிய படங்களுடன் என்னைப் பற்றிய மிகவும் அபத்தமான தலைப்புகள் மற்றும் விசித்திரமான விளம்பரங்கள் கொண்ட கட்டுரைகள் வருகின்றன. இந்த விஷயத்தில் ரசிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பல்வேறு மோசடி இணைப்புகளுக்கு வழிவகுக்கும். அந்த விளம்பரங்களை X-தள நிர்வாகத்திடம் புகாரளிக்கவும். “அவர்களைத் தடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். X இயங்குதளம் விரைவில் சிக்கலைத் தீர்க்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.