‘டீசல்’ திரைப்படம் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், வினய், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எஸ்.பி. சினிமாஸ் தயாரித்து, தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறுகையில், “எனக்கு ஆக்ஷன் படங்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்கான சரியான கதைக்காகக் காத்திருந்தேன். ‘டீசல்’ படமும் அப்படித்தான் அமைந்தது. தங்கத்தை விட மதிப்புமிக்கதாகக் கருதப்படும் எரிபொருள் உலகின் திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படம் சொல்கிறது. டிரெய்லரைப் பார்த்த பலர், என் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்திற்கு சரியான அளவைக் கொண்டு வந்ததற்காக என்னைப் பாராட்டினர்.

சாதாரண மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் பெட்ரோல், டீசல் போன்ற இந்தப் பொருட்களுக்குப் பின்னால் இவ்வளவு மாஃபியா இருக்கிறதா என்பதை அனைவரும் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். இது மக்களுக்கான படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக கடலில் 30 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
அதுல்யாவும் நிலைமையைப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நல்ல படத்தைக் கொடுப்பதே எனது நோக்கம். தீபாவளிக்கு எனது படம் வெளியாகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.