திரையுலகில் தனித்துவமான காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் க்ரூப் டான்சராக பணியாற்றி வந்த இவர், ‘கோலமாவு கோகிலா’ படத்தில் வாய்ப்பு பெற்றதன் மூலம் திரைத்துறையில் கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ‘டாக்டர்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்தை தவிர்த்து முரட்டு சிங்கிளாக வாழ்ந்த இவர், சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சங்கீதா ஏற்கனவே ஒரு திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றிருந்தாலும், இருவரும் மனம் ஒத்தவர்கள் என நெருங்கிய வட்டாரத்தில் சொன்னார்கள். திருமணத்துக்குப் பின் இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒரு வருடம் கழித்து சங்கீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதன் பின் வளைகாப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததும், அந்த மகிழ்ச்சியையும் சங்கீதா பகிர்ந்திருந்தார்.
தற்போது, சங்கீதா ஒரு பேட்டியில், ரெடின் கிங்ஸ்லிக்கு எப்படி காதல் வந்தது என்பதை உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார். “என் அப்பா இறந்த போது, அவர் ஊருக்கு வெளியே இருந்தார். அவர் வந்த பிறகு வீட்டிற்கு வந்து என்னை ஆறுதல் கூறினார். எல்லோரும் சோகத்தில் இருந்த அந்த நேரத்தில், அவர் வந்த 5 நிமிடங்களில் வீட்டு சூழ்நிலையை ஒரு உற்சாகமான சூழ்நிலையாக்கினார். அப்போ தான் என் மனசுல ‘இந்த மனுஷன் வாழ்க்கையில் இருந்தா நன்றாக இருக்கும்’ என்ற எண்ணம் வந்தது” என்கிறார் சங்கீதா.
அந்த தருணத்தில் ஏற்பட்ட காதல் உணர்வே இன்று வாழ்க்கையாக மாறியிருக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் போஸிடிவ் ஆட்டிட்யூட்டும், பாசமான குணமும் தான் சங்கீதாவை கவர்ந்ததாகவும், அவருடைய மகிழ்வான ஆளுமை அப்பாவின் நினைவுகளை மீட்டெடுத்ததாகவும் கூறியிருக்கிறார். காதலும், குடும்ப உறவுகளும் சேர்ந்த ஒரு அழகான வாழ்வில் இப்போது இவர்கள் இருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.