சென்னை : ரெட்ரோ படத்தில் வரும் கனிமா பாடல் எதன் தாக்கத்தினால் உருவானது என்பது குறித்து சந்தோஷ் நாராயணன் பதில் அளித்துள்ளார்.
ரெட்ரோ படத்தில் கனிமா பாடலின் உருவாக்கம் பழைய தமிழ்ப் பாடலின் தாக்கத்தினால் உருவானது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. பல நடிகைகளும் இந்தப் பாடலுக்கு நடனமாடினர். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடல் குறித்து பேசியதாவது:
கனிமா பாடலினை ரசிகர்களுக்காக ப்ரேக்டௌன் (எப்படி உருவானது) செய்ய வேண்டுமெனத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தப் பாடலில் மிகவும் பாரம்பரியமான இசைக் கருவிகளை பயன்படுத்தியுள்ளோம்.
என் ஆசை மைதிலியே பாடலின் தாக்கத்தினால்தான் இந்தப் பாடலை (கனிமா) உருவாக்கினேன். இதில் பயன்படுத்திய கருவிகள், எப்படி இசையை கலந்தேன், இதன் செயல்பாடுகள் குறித்து எல்லாம் கூற ஆசைப்படுகிறேன்.
இந்தப் படத்தில் பொதுவாக 80, 90களில் இருந்த இசையையும் தற்போதுள்ள இசையையும் கலந்து புதியதாகக் கொடுக்க முயற்சித்துள்ளேன் என்றார்.