சென்னை: சினிமாத் துறையில் மனிதாபிமானத் தன்மை சற்று குறைந்தே இருக்கிறது. நமக்கு என்ன உடம்பு முடியாமல் சென்றாலும் நாம் இங்கு வேலை செய்தாகவேண்டும் என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்தார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணல் ஒன்றில் நித்யா மேனன் சில சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது ” எனக்கு சினிமாத்துறை அவ்வளவாக பிடிக்காத ஒன்று இன்றும் கூட. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த துறையை விட்டு சென்றுவிடுவேன். இந்த துறையில் எல்லாமே Anything for granted என எடுத்துக் கொள்கிறார்கள். நடிகையை பார்த்தாலே அவர்களிடம் கை கொடுக்க முயல்கிறார்கள். இதுவே சாதாரண ஒரு பெண்ணிடம் இவர்கள் சென்று கை கொடுப்பார்களா?. இங்கு சுயமாக நம்மால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
மேலும் இத்துறையில் மனிதாபிமானத் தன்மை சற்று குறைந்தே இருக்கிறது. நமக்கு என்ன உடம்பு முடியாமல் சென்றாலும் நாம் இங்கு வேலை செய்தாகவேண்டும். அப்படி நான் மிஷ்கின் இயக்கும் சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் பொழுது முதல் நாள் படப்பிடிப்பு அன்று எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அதை நான் முதன் முதலில் ஒரு ஆண் இயக்குனர் மிஷ்கினிடம் கூறினேன்.
அதை அவர் புரிந்துக் கொண்டு நீ ஓய்வு எடு நாளை படப்பிடிப்பிற்கும் தாமதமாகவே வா என்று கூறினார். இந்த விஷயத்தை அவர் கூறியவுடன் நம்மை புரிந்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என கூறினார்.