சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
என்கவுன்டர், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகம் போன்றவற்றைப் பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.65 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
இப்படம் 2 நாட்களுக்கு பிறகு ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. அடுத்து இன்றும் (அக். 12) நாளையும் (அக். 13) விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ரூ.100 கோடி கிளப் படங்கள்: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’, தனுஷின் ‘ராயன்’, விஜய்யின் ‘தி கோட்’, ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ ஆகிய படங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.