விஜய் படம் மூலம் நடிகையான ஸ்வாதி, 1995ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், சிவகுமார், மனோரமா உள்ளிட்டோர் நடித்த தேவா படத்தில் அறிமுகமானார். பின்னர் வசந்தவாசல், செல்வா போன்ற படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதேபோல் அஜித் குமாருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது பாரிஜாதம் சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் பட அனுபவம் குறித்து ஸ்வாதி பகிர்ந்துள்ளார். அவர் 8, 9ஆம் வகுப்பில் படிக்கும் போதே மாடலிங் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்த எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்வாதியின் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். போனை எடுத்த அவரது அம்மா, மகளை படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று சொல்லி துண்டித்துவிட்டார். ஆனால் எஸ்.ஏ.சி. ஆபீஸிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அப்பாவும் “தமிழ் தெரியும், சும்மா போய் பார்ப்போம், படத்தில் தேர்வு செய்வது அவர்களே” என்று கூறியதால், ஸ்வாதியின் அம்மா, மகளுடன் ஹைதராபாத் இருந்து சென்னைக்கு வந்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டில் போட்டோஷூட் நடந்தபோது, ஒருவர் வந்து ஸ்வாதி மீது கை வைத்தார். திரும்பிப் பார்த்தபோது அது விஜய் எனத் தெரிந்தது. அந்த போட்டோஷூட் முடிந்ததும், “நீங்கள்தான் இந்த படத்தின் ஹீரோயின்” என்று கூறியுள்ளனர். ஆரம்பத்தில் மற்றொரு முன்னணி நடிகை நடிக்க இருந்தார், ஆனால் ஸ்கூல் விடுமுறை காரணமாக ஸ்வாதிக்கு வாய்ப்பு கிடைத்தது.
தேவா படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சி நடந்தபோது, கதைப்படி சிவகுமார் தந்தையாக மகளை அறைந்து, அவள் அழ வேண்டும். ஆனால் சிவகுமார் உண்மையாக அடிக்காமல் லேசாகத் தொட்டதால் ஸ்வாதிக்கு கண்ணீர் வரவில்லை. பல டேக் சென்றும் அழுகை வராததால், கோபமடைந்த எஸ்.ஏ. சந்திரசேகர் நேராக சென்று ஸ்வாதியின் கன்னத்தில் பலமாக அறைந்தார். அதனால் வலியால் அழுதுவிட்டார். அதே காட்சி ஓகே ஆனது.
அந்த அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், எஸ்.ஏ.சி. விரல் ரேகை கன்னத்தில் பதிந்துவிட்டது. பள்ளி மாணவியாக இருந்த ஸ்வாதி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் முன்னால் அடிபட்டதால் பெரும் அவமானத்தில் அமைதியாக இருந்தார். இதை கவனித்த விஜய்யின் அம்மா ஷோபா, “சின்னப் பொண்ணு, புதுப் பொண்ணு, அதை போய் அடிச்சுட்டீங்களே” என்று கூறி கணவரிடம் பேசி, பின்னர் எஸ்.ஏ.சி. வந்து ஸ்வாதியை சமாதானப்படுத்தினார்.
இதுகுறித்து ஸ்வாதி, “எஸ்.ஏ.சி.க்கு ஸ்பாட்டில் எப்படி கோபம் வரும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்ததால் அந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாததாக இருந்தது” என்று பகிர்ந்துள்ளார்.