நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தன் காதலும், திருமணமும் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஆண்டனி தட்டிலை 2010ம் ஆண்டிலிருந்தே காதலிக்கத் தொடங்கியதாகவும், தன்னுடைய கல்லூரி நாட்களில் அவருடன் நெருக்கம் அதிகரித்ததாகவும் கூறினார். தன்னுடைய வேலைவாய்ப்பு, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றால் 6 ஆண்டுகள் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என கீர்த்தி நினைவுகூர்ந்தார்.

ஆண்டனி தட்டில் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், காதல் கடிதங்களிலும், வீடியோ காலிலும் மட்டுமே தொடர்ந்ததாக கூறிய கீர்த்தி, “அவர் நாடு திரும்பிய பிறகு திருமணத்துக்குத் தயார் இல்லை, நானும் இல்லை. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்பாவிடம் ஆண்டனி பற்றி சொன்னேன். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு வரும் என நினைத்தேன். ஆனால் அப்பா சுரேஷ், எந்த தயக்கமுமின்றி சம்மதித்தார். அதுமட்டுமில்லாமல், ஆண்டனிக்கு ட்ரிங்க்ஸ் ஊற்றிக் கொடுத்தார்” அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
திருமணத்திற்கு முன் ஆண்டனி தன்னிடம் பரிசாக கொடுத்த நாய்க்கு, தங்கள் பெயர்களின் முதல் எழுத்துகளை இணைத்து “NyKe” என பெயரிட்டதாக கீர்த்தி மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். 2024ம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் விஜய், த்ரிஷா, அட்லி, ப்ரியா அட்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜய் தனி விமானத்தில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
திருமணத்துக்குப் பிறகும் கீர்த்தி சுரேஷின் சினிமா பயணம் நிதானமாகவே தொடர்கிறது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். “திருமணமான நடிகைக்கு வாய்ப்புகள் குறையும்” என்ற பழைய கருத்தை முறியடித்து, கீர்த்தி தன்னுடைய திறமையால் இன்னும் முன்னணியில் திகழ்கிறார். ரசிகர்கள் இப்போது “ஜூனியர் கீர்த்தி சுரேஷ் எப்போ வரும்?” என ஆவலுடன் கேட்டு வருகிறார்கள்.