நடிகர் அஜித்தின் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தின் 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “துபாய் கார் பந்தயத்தின் போதும் அதற்குப் பிறகும் நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் ஊக்கத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் வல்ல கடவுள், என் குடும்பம், திரைப்படத் துறை, ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வார்த்தைகள் போதாது.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் எனது ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் உந்து சக்தியாகும். என் முன் உள்ள சவால்களை முறியடித்து மோட்டார் விளையாட்டுகளில் புதிய சாதனைகளை உருவாக்க இது ஒரு உத்வேகம். இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! இது உங்களைப் பற்றியது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒவ்வொரு கணமும் மெய்ப்பிக்க நான் உறுதிபூண்டுள்ளேன். அனைவருக்கும் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்கள், ”என்று அஜித் கூறினார்.