கடந்த மாதம் 22-ம் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அவரது X பக்கத்தில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில், பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, நமது உண்மையான ஹீரோக்கள் எல்லைகளில் துணிச்சலுடன் செயல்படுவார்கள் என்பதை அறியாமல், எனது முதல் சிம்பொனிக்கு ‘வேலியண்ட்’ (வேலியண்ட் என்றால் தைரியம் மற்றும் துணிச்சல்) என்று பெயரிட்டேன்.

ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது ஹீரோக்களின் துணிச்சலான முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் ‘தேசிய பாதுகாப்பு நிதிக்கு’ நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.