சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா புதிய சிம்பொனியை எழுதுவதாக அறிவித்துள்ளார். மார்ச் 8-ம் தேதி, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் ‘வேலியண்ட்’ என்ற கிளாசிக்கல் சிம்பொனியை இளையராஜா நிகழ்த்தினார். உலகின் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் அதை அவர் நிகழ்த்தினார்.
பல்வேறு இசைக்கருவிகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தனது இசைக் குறிப்புகளை வாசிப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மயங்கினர். இதன் மூலம், ஆசிய பிராந்தியத்திலிருந்து சிம்பொனியை எழுதி நிகழ்த்திய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றுள்ளார்.

மொஸார்ட், பீத்தோவன் மற்றும் சாய்கோவ்ஸ்கி போன்ற சிம்பொனி இசையமைப்பாளர்களின் வரிசையில் இளையராஜா இணைந்துள்ளார். இந்த சூழலில், இளையராஜா தனது புதிய சிம்பொனியை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி நாளில் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது அடுத்த சிம்பொனியை எழுதுகிறேன். சிம்பொனி டான்சர்ஸ் என்ற புதிய இசைத் தொகுப்பையும் எழுதுகிறேன். தீபாவளி நற்செய்தியாக இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.