தமிழ் சினிமாவில் ஹாரர், த்ரில்லர், ஆக்ஷன் போன்ற பல ஜானர்கள் வெற்றிகரமாக வந்துள்ளன. ஆனால் அரசியல் சுவாரசியமாக கலந்த திரைப்படங்கள் குறைவாகவே வந்துள்ளன. அந்த வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் “அமைதிப்படை”. சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இணைந்த அந்த படம், நாற்காலிக்காக நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை முன்வைத்து ரசிகர்களை சிந்திக்க வைத்தது.

விஜயகாந்த் நடித்த ஏழை ஜாதி, சுதேசி, ரமணா போன்ற படங்கள் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை படம் பிடித்தன. அரசியல் வசனங்கள் விஜயகாந்திற்கு கை ஓங்கியது போல, அவரது பேச்சுகள் மக்களிடம் நேரடியாகப் போய்ச் சேர்ந்தன. வாழும் போது அரசியல்வாதிகளை சினிமா வாயிலாக விமர்சித்தவர். அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், இன்று அவரது கட்சி எங்கே என்பதிலே குழப்பமே உள்ளது.
சத்யராஜ் நடித்த “அமைதிப்படை” படம் தமிழ் சினிமாவின் அரசியல் விமர்சனங்களுக்கான அடையாளமாகவும் நினைவில் நிற்கிறது. “அமாவாசை” என்ற எம்.எல்.ஏ பாத்திரம், இன்று வரை மீம்ஸ்களில் வாழ்கிறது. மணிவண்ணன் எழுதிய வசனங்கள், நக்கல் நையாண்டியுடன் அரசியலின் இருண்ட ஓரங்களை வெளிச்சத்தில் கொண்டு வந்தன.
சரத்குமார் நடித்த “நம்நாடு” போன்ற அரசியல் படங்கள் இருந்தாலும், அவர் அரசியல் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தனது கட்சியை ஒரு தேசிய கட்சிக்கு ஒப்படைத்ததாகக் கூறப்படுவது, அவரது அரசியல் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
ராமராஜன், ஒரு காலத்தில் ரஜினி, கமலிடம் போட்டியாகத் திரையரங்குகளை பிடித்தவர். எம்ஜிஆர் பாதையில் நடந்தாலும், அரசியலில் அவருக்கு அந்த வெற்றி கிடைக்கவில்லை. “சாமானியன்” படம் அரசியல் சாயலோடு இருந்தாலும், ரசிகர்கள் அதை ஏற்கவில்லை.
குஷ்பு, ஜெயலலிதாவைப் போல அரசியலுக்கு வந்தாலும், தொடர்ந்து கட்சி மாறி தற்போது ஒரு புதிய தளத்தில் முயற்சி செய்கிறார். பேச்சு, நம்பிக்கை, வேகமான பதில்கள் இருந்தாலும், தேர்தலில் இன்னும் வெற்றி காணவில்லை.
விஜய் நடித்த “சர்க்கார்” படம் அரசியல் கலந்த கதைக்களத்துடன் வந்தது. நேரடியாக அரசியல்வாதிகளை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இருந்ததாக கூறப்பட்டாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது விஜய் தனது கட்சியை ஆரம்பித்து மக்களிடம் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயல்கிறார்.
சினிமா என்பது உணர்வுகளின் திரை, அரசியல் என்பது நிஜ வாழ்க்கையின் வாடை. இவை இரண்டும் கலந்தால் மக்களுக்கு நிஜத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், திரைப்படங்கள் மூலம் அரசியலில் வருவதற்கான முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறவில்லை. சிலர் வென்றாலும், பெரும்பாலோர் பாதியில் வழி மாறுகிறார்கள்.
சினிமா ரசிகர்களின் ஆதரவு அரசியலுக்கு நேரடியாகத் தாவாது என்பதற்கு இதுவே பெரிய சாட்சி. எந்த நடிகரும் அரசியலுக்கு வந்தாலும், மக்களின் நம்பிக்கையை நிலைத்துவைத்தல் தான் பெரிய சவால். சினிமா வசனங்களை போல அரசியலும் எளிதல்ல என்பது அவர்களின் பயணங்கள் மூலம் தெளிவாகிறது.
நடிகர்களின் அரசியல் பயணங்கள் அவர்களின் திரைபயணத்தை விட சிக்கலானவை. ஆனால், அந்த பயணங்களில் சிலரது முயற்சி பாராட்டுதலுக்குரியது. இன்று திரையில் பேசும் வார்த்தைகள் நாளை நாடாளுமன்றத்தில் பேசும் உரையாவதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.