கோவை பொள்ளாச்சியில் உள்ள தங்கம் திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக அதிக விலையில் விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நாகார்ஜுனா, ஆமிர்கான், உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசர், பாடல்கள், ட்ரைலர் அனைத்தும் வெளியான நிலையில் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இந்நிலையில், திரையரங்க நிர்வாகமே திரையரங்கின் பின்புறம் காலி இடத்தில் 190 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை 400 ரூபாய்க்கு விற்பனை செய்த வீடியோ வைரலாகியுள்ளது. பணமாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், டிக்கெட்டின் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க கூடாது என்றும் ஊழியர்கள் கூறியதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
விதிமுறைகளின்படி, எந்த திரைப்பட டிக்கெட்டையும் நிர்ணய விலைக்கு மேல் விற்கக்கூடாது. இருப்பினும், ‘கூலி’ படத்தின் சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கவனிக்கப்படுகிறது.