சென்னை: ரோபோ சங்கர் மறைவுக்கு இர்பான் பதான் தனது இரங்கல் தெரிவித்து இருந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், ‘தீபாவளி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு ‘மாரி’, ‘விசுவாசம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்து ‘வெண்டிலேட்டர்’ கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்னர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரோபோ சங்கர் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “ரோபோ சங்கரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.