ராமின் ‘சக்கரவர்த்தி’, விஷாலின் ‘துப்பறிவாளன்’, ‘அயோக்யா’, ‘துர்கா’ போன்ற படங்களுக்கு ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:- பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளராக இருந்து ஒளிப்பதிவாளர் ஆனேன்.
‘லியோ’, ‘கேம் சேஞ்சர்’, ‘சிகந்தர்’ போன்ற படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்துள்ளேன். இப்போது நான் பணியாற்றிய ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘இன்வெஸ்டிகேஷன் திரில்லர்’ படம் என்பதால், முழுப் படத்தையும் இரவில் படமாக்கினோம். எங்களால் அதிக விளக்குகளை பயன்படுத்த முடியவில்லை. ஒளிப்பதிவு ஒரு படத்தின் கதைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதால், ஒளிப்பதிவு பிரமாண்டமாகத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.

அனுமதி கிடைத்த சிறிய இடத்தில் சாலைகள் தொடர்பான காட்சிகளை படமாக்கினோம். பிறகு வெவ்வேறு இடங்களில் நடப்பதாக மாற்றினோம். ‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக லண்டன் மற்றும் அஜர்பைஜானில் சில காட்சிகளை படமாக்கினோம். அந்த படத்தின் கதை சிறப்பாக உள்ளது. விரைவில் தொடங்கும் என நம்புகிறேன். இன்னும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கொரோனா காலத்தில், மலேசியாவில் ஒரு சேனலுக்காக ‘காதல் மாதிரி’ என்ற வெப் சீரிஸை நானே படமாக்கி இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஒளிப்பதிவில் கவனம் செலுத்துவேன். எதிர்காலத்தில் ஒரு படம் இயக்குவேன். இவ்வாறு ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் கூறியுள்ளார்.