பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது. சமீபத்தில் பாடகி சுசித்ரா, ஆர்த்தியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஆர்த்தியின் தந்தை, சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜெயம் ரவி, சிறுவயதிலேயே திரையுலகில் அறிமுகமானவர். ‘ஜெயம்’ படம் அவருக்கு பெரும் புகழைக் கொண்டு வந்தது. பின்னர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆனால் திடீரென ஜெயம் ரவி, தனது மனைவியிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற விரும்புவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததுடன், தன் பெயரை ‘ரவி மோகன்’ என மாற்றியதாகவும் இனி ‘ஜெயம் ரவி’ என அழைக்க வேண்டாம் என்றும் அறிவித்தார். ஆர்த்தி, தனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் பிரிவதாகக் கூறி தனது வேதனையை வெளிப்படுத்தினார். இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மேற்கொண்டனர்.

இதில் பாடகி கெனிஷாவின் பெயரும் இணைக்கப்பட்டு பல வதந்திகள் வெளியானது. இதில் தலையிட வேண்டாம் என இருவரும் கூறிய நிலையில் விவகாரம் சற்று அமைதியானது. ஆனால் ஐசரி கணேசின் வீட்டில் நடந்த திருமண விழாவில், ரவி மோகன் மற்றும் கெனிஷா சேர்ந்து பங்கேற்றதால் விவகாரம் மீண்டும் பேசப்படும் நிலையில் வந்தது.
ஆர்த்தி, தனது வாழ்கையில் மூன்றாம் நபர் தலையீடு இருப்பதாக கூறியதுடன், அவரது தாயார் சுஜாதா, ரவி மோகன், கெனிஷா என அனைவரும் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டனர். ரவி மோகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் ஆர்த்தி, மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரி மனுதாக்கல் செய்தார். அதனை ரவி மோகன் இழிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்நிலையில், இருவரும் தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், முன்பு வெளியான பதிவுகளையும் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் விவகாரம் சற்றே அமைதியாகியது. ஆனால் சுசித்ரா வெளியிட்ட வீடியோ மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் ஆர்த்தியை குற்றம் சுமத்தும் வகையில் கூறியிருந்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே ஆர்த்தியின் தந்தை, தனது மகளை அவதூறாக பேசியதற்காகவும், குடும்ப கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியதற்காகவும், அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்பதற்காகவும் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.