பெங்களூரு: கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஜான்வி, தனது வாழ்க்கை குறித்த சோகமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சிறிய திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவர், அதிபத்ரா படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது யுவ சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே தனது திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த கதையை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, பாரம்பரிய குடும்பம் என்பதால் விவாகரத்துக்கு முன் நீண்ட காலம் காத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்தபோதும், மாற்றமில்லை என்பதை உணர்ந்து இறுதியில் விவாகரத்துக்குச் சென்றதாகக் கூறினார். அந்த நேரத்தில் குடும்பத்தினரே “இது போதும், வேண்டாம்” என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, விவாகரத்து முடிவதற்கு முன்பே அவரது முன்னாள் கணவர், ஜான்வியின் நெருங்கிய தோழியையே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார். “என் கூடவே இருந்த தோழி தான். எப்படி இப்படி நடந்தது என்று அதிர்ச்சியடைந்தேன். இது எல்லாம் ஒரு சினிமா கதை போலத்தான் தோன்றியது” என்று அவர் கூறினார்.
இப்போது பிக் பாஸ் ரசிகர்கள், ஜான்வியின் தோழி செய்த துரோகம் குறித்து விவாதித்து வருகின்றனர். சிலர், அவர் தனது சோக அனுபவத்தை ரசிகர்களின் அனுதாபத்தைப் பெறும் முயற்சியாக பயன்படுத்துகிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த வெளிப்பாடு பிக் பாஸ் வீட்டுக்குள் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.