ஐதராபாத் : இடைக்கால ஜாமீன் பெற்றதும் வீண் ஆகி உள்ளது.
ஜானி மாஸ்டரின் தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி மீது கடந்த மாதம் பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். இதையடுத்து ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்தவரை தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து கோவாவில் வைத்து ஜானியை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமீன் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் பெறுவதற்கு ரூ. 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது, மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை மறுநாள் தேசிய விருந்துகள் வழங்கும் விழா நடக்கவிருந்த நிலையில், ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜானிக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான “திருச்சிற்றம்பலம்” படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்காதா” பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.