சென்னை: ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாசும் அவரது மனைவி சைந்தவியும் ஒன்றாக மனு தாக்கல் செய்துவிட்டு, வழக்கு விசாரணைக்குப் பின் மீண்டும் ஒன்றாக புறப்பட்டுச் சென்றனர்.
தமிழ் சினிமாவில் ’வெயில்’ படம் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வரும் பிரகாஷ், நடிகராகவும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ், கடந்த 2013ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணி பாடகியுமான சைந்தவியை மணந்தார்.
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், 12 வருட திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக நீதிபதி முன்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஒரே காரில் வந்த இருவரும் ஒன்றாக மனு தாக்கல் செய்துவிட்டு, வழக்கு விசாரணைக்குப் பின் மீண்டும் ஒன்றாக புறப்பட்டுச் சென்றனர்.