சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான “காளைமாடன் கானம்” பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மாரி செல்வராஜ் எழுதிய வரிகளும், நிவாஸ் கே பிரசன்னா அமைத்த இசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. துருவ் விக்ரம் கிராமத்து திருவிழாவில் தீப்பந்தத்துடன் ஆடும் காட்சிகள், மாலைகள் மற்றும் மண் வாசனையுடன் கூடிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளன.
பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பெற்றுள்ளது. ரசிகர்கள் “இது தான் உண்மையான தென்னாட்டு பாரம்பரியம்”, “இசையிலும் காட்சியிலும் ஆன்மா இருக்கிறது” என பாராட்டி வருகின்றனர். குறிப்பாக துருவ் விக்ரமின் நடன அசைவுகளும், சாண்டி மாஸ்டரின் நடன அமைப்பும் பாடலுக்கு பெரும் வலிமையை அளித்துள்ளது.
இது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் ஐந்தாவது திரைப்படம்; அதேசமயம் துருவ் விக்ரமின் மூன்றாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பு ஆகி உள்ளது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. “காளைமாடன் கானம்” பாடலின் மூலம் பைசன் படம் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது என்பது தெளிவாகிறது.