பிக்கி (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு) சார்பில் சென்னையில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்குக் குழுத் தலைவர் கெவின் வாஸ் (ஜியோஸ்டார் என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி), மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில் கருத்தரங்கில் பேசியதாவது:-
தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சியை பிராந்தியத்திலிருந்து தேசிய அளவிலும், தற்போது உலக அளவில் கவனத்தையும் ஈர்த்து வருவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். சினிமா என்ற எல்லையைத் தாண்டி உலக ரசிகர்களை கவர்ந்தவர் கமல்ஹாசன். “மூன்றாம் பிறை” (இந்தியில் “சத்மா”), “அப்பூ ராஜா,” மற்றும் “சாச்சி 420” போன்ற படங்கள் அவர் மொழி மற்றும் கலாச்சாரம் கடந்து அனைவரையும் கவரும் என்பதை நிரூபித்தது.
கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில், தென்னிந்திய திரைப்படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, மற்றும் காந்தாரா போன்ற படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தென்னிந்திய சினிமா உலகப் பரபரப்பாக மாறியுள்ளது. மேலும், “பொன்னியின் செல்வன்” மற்றும் “விக்ரம்” போன்ற தமிழ் திரைப்படங்கள் அவற்றின் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலகளாவிய ஈர்ப்பைப் பெற்றுள்ளன. தொலைக்காட்சியும், டிஜிட்டலும் இணைந்து புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.