இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்திருந்த பொழுதுபோக்கு துறை மாநாடு நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழக அரசு, தொழில் துறையினரின் கோரிக்கைகளை செவிமடுத்து, தீர்வு காணும் அரசாக இருப்பதால், திரையுலகம் சார்பில் கோரிக்கை வைக்க இந்த மேடையை பயன்படுத்துகிறேன்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேர்ந்தால், அது இரட்டை வரியாக மாறும். மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ் திரையுலகிற்கு நிம்மதியாக இருக்கும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், பையனூரில் 90 ஏக்கர் நிலத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான குடியிருப்பு கட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பையும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு தமிழ் திரையுலகினருக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.