வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் மாரீசன் திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையிடப்படவுள்ளது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே தொடக்கத்திலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை முன்னதாகவே பார்த்துள்ள கமல் ஹாசன், தனது சமூக வலைதளத்தில் அதைப் பற்றிய பாராட்டுகளை பதிவு செய்துள்ளார்.

கமல் ஹாசன் தனது ட்வீட்டில், “மாரீசன் படம் பார்த்து சிரித்தேன், சிந்தித்தேன், வியந்தேன். மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டினேன். ரசிகனாகவும், படைப்பாளியாகவும் இது எனக்கு பிடித்த படம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனத்தை பார்த்த ரசிகர்கள், “இந்த படத்தை திரையரங்கில் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்” என உறுதியுடன் டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கமலின் பாராட்டு மட்டும் அல்லாமல், மாமன்னன் படத்திற்கு பிறகு ஃபஹத் – வடிவேலு கூட்டணியில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதையமைப்புடன் படம் வருவதால், இந்த கூட்டணியை மீண்டும் பார்க்கும் ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில், “மன்னிக்கவும் ஆண்டவரே, மீண்டும் ஆங்கில ட்வீட்! நாங்கள் டிக்ஷனரி தேட வேண்டியதா?” என சிலர் நகைச்சுவையாக எதிர்வினையளித்துள்ளனர்.
இந்தத் தருணத்தில், உதயநிதி ஸ்டாலினும் இதைப் பற்றி ட்வீட் செய்திருக்கிறாரா என்று தேடிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் புதுப்படங்கள் குறித்து விமர்சனங்கள் தெரிவித்த அவரிடம் தற்போது மாரீசனைப் பற்றிய கருத்து ஏன் இல்லை என நகைச்சுவை கலந்த கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, ஃபஹத் ஃபாசிலின் “பட்டன் போன்” விவகாரமும் வைரலாகியுள்ளது. பலர் அவர் சாதாரண போன் பயன்படுத்துவதாக நினைத்தாலும், அது ரூ.10 லட்சம் மதிப்புடைய Vertu பிராண்டின் சொகுசு கைபேசி என்பதும் பின்னர் தெரியவந்தது. இதனை அவர் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு, “இந்த விஷயம் இவ்வளவு பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்திருந்தார்.
மாரீசன் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது மலையாளத்திலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இது வடிவேலு படம் என்றால், கேரளாவில் இது ஃபஹத் ஃபாசில் படம் என்பதே நிலவரம். தங்களது ஸ்டைலில் விளம்பரமே இல்லாமல் மெள்ள மெள்ள கலக்கி வரும் மாரீசன், சிரிப்பும் சிந்தனையும் தரும் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது.