சென்னை: கமல், ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டுமா? என்பது தான் கோலிவுட்டில் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.
தமிழ் சினிமாவில் முதல் ரூ.100 கோடி வசூல் படம் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் தான். அதற்குப்பின் ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார்கள்.
கமல் படங்களில் மரோசரித்ரா (தெலுங்கு)1978, ஏக் துஜே கேலியே (ஹிந்தி)1981 ஆகிய இரு படங்களும் 500 நாட்கள் ஓடி வசூல் செய்திருந்தாலும் கமலின் சகலகலா வல்லவன் (1982) தான் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம். அந்தக்காலத்திலேயே ரூ.8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
தசாவதாரம் (2008) பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி ரூ.200 கோடி வசூல் செய்தது. விஸ்வரூபம் (2013) மிகுந்த போராட்டஙகளுக்குப்பின் வெளியாகி ரூ.220 கோடி வசூல் செய்தது. 2022 ம் ஆண்டு வெளிவந்த கமலின் விக்ரம் படம் அதிரி புதிரி ஹிட் ஆகி ரூ.500 கோடி வசூலைத் தொட்ட முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையைப்பெற்றது. இதற்குப்பின் கமலின் மார்க்கெட் லெவல் வேறு எங்கோ போனது.
அதுவரை ரஜினி படங்கள் அளவுக்குக் கமல் படங்கள் வசூலிப்பதில்லை என்ற நிலை தான் இருந்தது. கமல் படங்கள் ஏ செண்ட்டர் ஆடியன்சை அதிக அளவு கவரும். சி செண்ட்டர் ஆடியன்சிடம் அதிக ரீச் இருக்காது. ஆனால் ரஜினி படங்கள் பி, சி சென்டர் ரசிகர்களைப்பெரிதும் கவர்ந்து வசூல் மழை பெய்யும் அளவுக்கு ஓடியது.
ரஜினியின் ஒரு தோல்விப்பட வசூல் கமலின் ஒரு வெற்றிப்பட வசூலுக்கு இணை ஆகும். 2024ல் வெளியான ரஜினி படம் வேட்டையன். இது சுமாராகத்தான் ஓடியது. ஆனால் அதன் வசூல் ரூ.250 கோடி. அதே போல பேட்ட (2019), தர்பார் (2020) இரண்டும் சுமார் ரகப்படங்கள் தான். ஆனால் இரண்டுமே ரூ.250 கோடி வசூல். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளி வந்த எந்திரன் (2010) ரூ.320 கோடி ரூபாய் வசூல். எந்திரன் பாகம் 2 ஆக வெளிவந்த 2.O (2018) ரூ.800 கோடி வசூலித்து இதுவரை வந்த தமிழ் சினிமா வசூலில் N0 1 இடத்தில் இன்னமும் இருக்கிறது.
ரஜினி நடிப்பில் வெளி வந்த கபாலி (2016) படம் ரூ.305 கோடி வசூலித்து இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சி ஒரு டிக்கெட் ரூ.1000 என்ற அளவில் விற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெறுகிறது. விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கூலி (2025) படம் ரூ.675 கோடி வசூல் என்றாலும் படத்தின் தரத்தில் ரஜினிக்குத் திருப்தி இல்லை.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் (2023) படம் ரூ.650 கோடி வசூலித்தது. அதே காம்போ வில் ஜெயிலர் பாகம் 2 விரைவில் வெளி வர இருக்கிறது. இப்போது ரூ.500 கோடி வசூலித்த விக்ரம் படத்தின் நாயகன் கமல் + ரூ.800 கோடி வசூலித்த 2.O பட நாயகன் ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டுமா?என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.