சென்னை: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கடந்த ஆண்டு தனது முறை மாமனான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர், கடந்த ஜனவரி மாதம் இந்திரஜா அழகான ஆண் குழந்தையை பெற்ற பெற்றடுத்தார். இந்த மகிழ்ச்சியான தகவலை கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தாய் மற்றும் சேய் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துகளை பெற்றது.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இயக்குநர் அட்லீயின் ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ படத்தில், அதிதியின் தோழியாக நடித்தார். அதன்பின், படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, தனது ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார்.
இந்திரஜா, கடந்த ஆண்டு கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சி வட இந்திய கலாச்சாரப்படி சங்கீத், மெஹந்தி, ஹல்தி என பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதி விஜய் டிவியில் ஒளிபரப்பான “மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கார்த்திக், இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
குழந்தை பிறந்ததையடுத்து, இந்திரஜா-கார்த்திக் தம்பதியினர், நடிகர் கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கமல் குழந்தைக்கு அழகான தமிழ் பெயராக “நட்சத்திரன்” என்று பெயர் வைத்தார். இந்த விசேஷ தருணத்தின் புகைப்படங்களை கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
திரைப்படத்தில் பிசியாக இருக்கும் இந்திரஜா:
முன்னதாக, இந்திரஜா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘Kooran’ படத்தில் நடித்திருந்தார். இதில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கொடைக்கானலில் ஒரு தாய் நாய் தனது குட்டியுடன் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு கும்பல் காரில் ஏற்றி குட்டி நாயை கொன்றுவிடுகின்றனர். தாய் நாய் குரைத்துக்கொண்டு அந்தக் காரை துரத்திச் செல்கிறது. அதன் பின், நீதி கோரி காவல் நிலையம் செல்கிறது. அங்கு துரத்தியடிக்கப்பட்டாலும் தாய் நாய் அந்த இடத்திலேயே படுத்துக்கொள்கிறது. இதை உணர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஏ. சந்திரசேகர், அந்த வாயில்லா ஜீவனுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்திரஜா தனது குழந்தையை பெற்ற பிறகு, Kooran படத்தின் ப்ரோமோஷனில் கூட கலந்து கொண்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நட்சத்திரன் என கமல் வைத்த அழகான தமிழ் பெயர் தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.