ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த கேம்சேஞ்சர் திரைப்படம் சங்கராந்தி நாளாக ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க, தமன் இசை வழங்கினார், மற்றும் திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி, ரிலீஸான முதல்நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு எதிர்மறையான விமர்சனங்கள் உருவாகியதால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. படத்தின் பட்ஜெட்டின் 50 சதவீதம் கூட படமே வசூலிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேம்சேஞ்சர் படத்தின் கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ், அந்தப் படம் ஏன் ஹிட்டாகவில்லை என்பதனை தன்னால் கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் கூறியதாவது: “அந்த படத்துக்கான ஒன்லைன் கதையை நான் கூறினேன்.
அதை ஷங்கர் சார் எப்படி பிரம்மாண்டமாக உருவாக்கப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். கதையில் பல பேரின் வேலை இருந்தது. திரைக்கதையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்தக் கதை ஏன் வரவேற்பைப் பெறவில்லை என்பதை என்னால் கணிக்க முடியாது” என கூறினார்.