சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பலர் நடித்துள்ளனர். ஃபீல் குட் கதையாக உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் தனுஷின் இயக்கத் திறமையையும், கதையாக்கத்தையும் பாராட்டி வருகின்றனர்.

தனுஷ் தனது சொந்த ஊரில் பார்த்த அனுபவங்கள், சம்பவங்கள் மற்றும் மக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியுள்ளார். மேலும் தனது பாட்டியையும் படத்தில் சிறிய கதாபாத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி சுற்றுவட்டார லொக்கேஷன்களில் படம் எடுக்கப்பட்டதால், இயற்கை காட்சிகளும், உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
படத்தில் காணப்படும் கருப்பசாமி கோயில் ரசிகர்களிடையே சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்தக் கோயில் தான் உண்மையில் தனுஷின் குடும்பக் குலதெய்வ கோயில் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், “அந்தக் கோயிலில் நான் வேலை இல்லாத நாட்களில் மாலை நேரங்களில் போய் உட்கார்ந்திருப்பேன். அங்கு அமைதி கிடைக்கும். அங்கேயே நான் சென்னைக்கு போகலாமா வேண்டாமா என்று சகுனம் கேட்டேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது,” என்று உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாகி வருகிறது. “தனுஷின் வாழ்க்கை முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மிக உணர்வை இது வெளிப்படுத்துகிறது,” என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இட்லி கடை படம் தற்போது குடும்பத்துடன் பார்க்க ஏற்ற ஒரு படம் எனவும், கஸ்தூரி ராஜாவின் பேட்டியால் படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.