கரூரில் நடந்த தவெக கட்சியின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நடிகையும் மாடலுமான கயாடு லோஹரின் பெயரில் ஒரு ட்வீட் வைரலானது. அதில், “கரூர் கூட்டத்தில் என் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். இது விஜயின் சுயநல அரசியலின் விளைவு” என்று குற்றச்சாட்டு செய்யப்பட்டிருந்தது.

சிலர் அந்த ட்வீட்டை பகிர்ந்து, கயாடு நேரடியாக விஜயை கேள்வி எழுப்பியதாக கூறினர். பலரும் அதிர்ச்சி அடைந்து ஸ்கிரீன்ஷாட் சேமித்தனர். எனினும் சில மணி நேரங்களில் கயாடு லோஹர் அதனை மறுத்து விளக்கம் அளித்தார். தனது பெயரில் வெளியான அந்த கணக்கு போலி என்று கூறிய அவர், “அந்த ட்வீட் நான் போட்டது இல்லை. கரூரில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. ஆனால் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், “இப்படி உங்கள் பெயரில் போலி கணக்குகள் இயங்கினால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் உண்டாகலாம்” என்று ரசிகர்கள் அறிவுறுத்தினர். தற்போது சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் இயங்கும் போலி கணக்குகள் குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது.
கரூர் சோகம் தமிழக அரசியலும், திரையுலகமும் பெரிதும் பேசும் விஷயமாக மாறியுள்ள நிலையில், கயாடு லோஹரின் பெயரில் வெளிவந்த இந்த சர்ச்சையான ட்வீட் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.