சென்னை: கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் சரோஜா தேவியின் ரசிகர்களுக்கு தெரியாத குடும்ப வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சரோஜாதேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா. இவர் பெங்களூரில் 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார். அவரது தாயார் ருத்ரம்மா. அவர்களின் 4-வது மகள்தான் சரோஜாதேவி.
சரோஜாதேவிக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி என்ற 3 அக்காவும் வசந்தா தேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இளம் பருவத்தில் சரோஜாதேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு செல்வார்.
சினிமாவுக்காக நடனம் கற்றுக் கொண்டார். சினிமா படங்களில் நீச்சல் உடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிவதை தவிர்த்தார். தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான கால கட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி. இவர் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்ற பெயரை மாற்றிக் கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த “மகாகவி காளிதாஸ்” என்ற கன்னடப் படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.