கொச்சி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் பாசிகள் விற்றுக்கொண்டிருந்த மோனாலிசா, தனது வசீகரமான கண்கள் மற்றும் புன்னகையால் இணைய உலகத்தில் வைரலானார். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதோடு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலர் அவரது படங்களை மாடர்ன் லுக்-களில் மாற்றி பகிர்ந்தனர். இதனால் அவர் ஒரே இரவில் நாடு முழுவதும் பிரபலமானார்.

மோனாலிசாவின் பழுப்பு நிற கண்களும், கவர்ச்சிகரமான புன்னகையும் அவரை சிறப்பாக பிரபலப்படுத்தின. எளிமையான கிராமப்புற தோற்றத்திலிருந்து விலகி, மேக்கப், மேற்கத்திய ஆடைகள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தன. அதன் பிறகு அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகள், மினி பட்ஜெட் ஹிந்தி படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார்.
தற்போது அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மலையாள நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் நடைபெற்ற படத்தின் பூஜை வெளியீட்டு விழாவில் மோனாலிசா கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மோனாலிசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அவரை மலையாள சினிமா உலகிற்குள் கொண்டுவரும் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.