பழமையான தமிழ்த் திரைப்பட நடிகை சரோஜாதேவி, 87 வயதில் இயற்கை எய்திய செய்தி சினிமா ரசிகர்களையும் திரையுலகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன. சரோஜா தேவியின் பெயரில் சுமார் 500 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பதித்த அவர், தனது கணவர் ஹர்ஷா 1986ம் ஆண்டு காலமான பிறகு, மறுமணம் செய்யாமல் வளர்ப்பு மகளான புவனேஸ்வரி மற்றும் அவளுடைய குழந்தைகளுடன் வாழ்ந்தார். ஆனால், புவனேஸ்வரி இளம் வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அவருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
17 வயதில் கன்னட திரைப்படமான மகாகவி காளிதாஸ் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் தமிழில் திருமணம் திரைப்படம் மூலம் பிரபலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 1967ல் ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். ஹர்ஷா அவரை திருமணத்துக்குப் பிறகும் நடிக்க அனுமதித்த ஒரே மனிதர் என கூறியுள்ளார் சரோஜாதேவி.
அவர் மறைந்த பிறகு, திரையுலகில் இருந்து சில வருடங்கள் விலகி இருந்தபோதிலும், பின்னர் குணச்சித்திர வேடங்களில் மீண்டும் திரும்பினார். புவனேஸ்வரியின் நினைவாக இலக்கிய விருதுகளை வழங்கி வந்தார். திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அவரது மரணத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற உயர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்-ஐ தனது தொழில்தெய்வமாகக் கருதி கடைசி வரை அவரைப் பற்றிய நினைவுகளில் வாழ்ந்தார். அவரது குடும்பத்தினரிலே யாரும் சினிமாவைத் தொடரவில்லை. சகோதரிகள் எல்லோரும் அவரை விட முன்னதாகவே உயிரிழந்தனர், அது அவரை நெஞ்சிற்குள் உடைத்தது. இறுதி வரை நெருக்கமான நபர்களின் இழப்பால் தீரா சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.