சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு முருகதாஸ் இயக்கியுள்ள படம் இது. இதற்கு முன்பு அவர் இயக்கிய சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா நடித்த “சிக்கந்தர்” திரைப்படம் இந்தி மற்றும் தமிழில் வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அந்தப் படத்தின் தோல்வி குறித்து முருகதாஸ், “சிக்கந்தர் படம் தோல்வியடைந்தது என் தவறு மட்டும் அல்ல. சல்மான் கானின் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பகலில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்கே தளத்திற்கு வருவார். எனவே நாங்கள் இரவில் பகல்போல் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலான காட்சிகளை கிரீன் மேட் மற்றும் கிராபிக்ஸ் மூலம் எடுத்தோம். இப்படிப்பட்ட சூழலில் படம் எப்படிச் சிறப்பாக வரும்? எனினும் அந்தக் கதை என் மனதிற்கு நெருக்கமான ஒன்று” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மதராஸி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இந்த படம் அவரின் காரியரில் ஒரு புதிய மைல் கல்லாக அமையும் என்று நம்புகின்றனர்.