சென்னை: நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது இரண்டாவது திருமண விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் மனைவியுடன் விவாகரத்து செய்யாமல் ஜாய் கிரிசில்டாவைத் திருமணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஜாய் கிரிசில்டா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தது விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் பின், அவர் போலீசில் புகார் அளித்து, ஊடகங்களிலும் பல ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்த நிலைமையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீளமான பதிவை வெளியிட்டுள்ளார். “நீதித்துறையின் செயல்பாட்டில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை சட்டத்தின் மூலம் வெளிப்படும். ஜாய் கிரிசில்டா எழுப்பிய சர்ச்சையை நீதிமன்றத்தில் தீர்க்கப் போகிறேன். எந்த ஊடக விவாதத்திலும் பங்கேற்க விருப்பமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆன்லைன் ஊடகங்களின் சுதந்திரத்தையும் மதிக்கிறேன். ஆனால் இந்த விவகாரம் குறித்த யூகங்கள் அல்லது கருத்துக்களை வெளியிட வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவரை “நீதிமன்றம் வரை செல்வது நல்ல முடிவு” என பாராட்ட, சிலர் “முதல்மனைவியை விட்டே முடியாத நிலையில் இரண்டாவது திருமணம் ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் கமெண்ட் செக்ஷனை முடக்கியுள்ளார். இதனால் அவரின் ரசிகர்களிடையே இன்னும் பல கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. நீதிமன்ற தீர்ப்பே இந்த சர்ச்சைக்கு முடிவு காணுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.