சென்னை: சமீபகாலமாக கோலிவுட்டில் மிகுந்த சர்ச்சையாக மாறியிருக்கும் விவகாரம் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண விவகாரம். இரண்டு மனைவிகள் தொடர்பான பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்ததும், இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாத நிலையில், ஜாயை இரண்டாவது மனைவியாக ரங்கராஜ் திருமணம் செய்ததாக கூறப்பட்டது. இதன் புகைப்படங்களை ஜாய் வெளியிட்டதும், பிரச்சனை வெடித்தது. தற்போது இருவரும் சட்டத்தின் வழியே தீர்வு காண முயல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த ரங்கராஜ் நேற்று வெளியிட்ட விளக்கத்தில், “நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இதனை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். ஊடகங்களில் இதுகுறித்து எந்தவிதமான பேச்சுகளிலும் ஈடுபட மாட்டேன்,” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் நேரடி பதில்களைத் தவிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டா இதனால் தணியவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஹலோ கணவரே மாதம்பட்டி ரங்கராஜ், முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க, விசாரணைக்கு வாங்க. நீங்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது; சட்டம் தன் கடமையை செய்யும்,” எனக் கூறி ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்தார். இதனால் ரசிகர்களிடையே மீண்டும் சர்ச்சை தீவிரமடைந்தது.
இந்நிலையில், ரங்கராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடிகர் புகழுடன் எடுத்த புகைப்படத்துடன், “பழகுனத மறக்கலையே.. அந்த பருவம் இப்ப கிடைக்கலையே” என்ற பாடல் வரிகளை இணைத்து பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ், “எப்படி இவ்வளவு கூலாக ஹேண்டில் செய்றீங்க பாஸ்?” என்று ஆச்சரியத்துடன் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். சர்ச்சையின் மத்தியில் கூட ரங்கராஜின் அமைதியான அணுகுமுறை ரசிகர்களிடையே கலந்த எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.