கர்நாடகா: ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மகாவதார் நரசிம்மா’ படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ படமும் ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து, இந்நிறுவனம் பிரபாசை வைத்து 3 படங்களை தயாரிக்க உள்ளது. இப்படங்களை 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மகாவதார் நரசிம்மா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் குமார் எழுதி இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும், ஹோம்பலே பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் கிளீம் புரொடக்சன்ஸ் கீழ் தயாரிக்க உள்ளனர்.
‘மகாவதார் நரசிம்மா’ எனும் அனிமேசன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓம் நரசிம்மா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும்.
இந்த திரைப்படத்தில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்திய அனிமேசன் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கிறது.