மாளவிகா மோகன், ‘பட்டம் போலே’ என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானவர், தமிழில் ‘பேட்ட’ மற்றும் ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் மற்றும் பார்வதி நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மாளவிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அங்கு, பி.டி உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். “எனக்கு பி.டி உஷாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசை உள்ளது. சிறு வயதில் நான் ஒரு தடகள வீராங்கனையாக இருந்தபோது, அவர் எனக்கு உத்வேகம் அளித்தார்” என கூறினார்.
மேலும், நடிகர் சூர்யா பற்றி கருத்து கேட்டபோது, “நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரது கண்கள் அழகாக பல பாவனைகளை வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.