சென்னை : இன்று நம்ம படம் மாமன் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க — உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை…மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் என்ற நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.
சூரி நடிப்பில் பிரசாந்த் பண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் ‘மாமன்’. லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
அக்காவாக சுவாசிகா நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாமன்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க — உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை…மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்
படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது. இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் — உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை!
இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை.அதனால்தான் பலர், “நம்ம வாழ்க்கையைப் போல தான்”, “மனதை தொட்ட படம்” என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்தது. Success meet நடத்தவில்லையா? இல்லை… ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் — இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்!
மாமன் படக்குழுவிற்கு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், Think Music,மீடியா நண்பர்கள் — உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்!அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும்.என் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் —நீங்கள் இல்லாமல் நான் இல்லை ” என்று பதிவிட்டுள்ளார்.
,