இந்த வாரம் தமிழ் ஓடிடி தளங்களில் பல முக்கியமான படங்களும் தொடர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ திரைப்படம் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான உணர்வுப் பாசத்தை மையமாகக் கொண்டது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

மே மாதம் வெளியான மாமன் திரைப்படம் தாய் மாமன் மற்றும் மருமகன் உறவை பேசும் ஒரு உணர்வுப்பூர்வ குடும்ப படம். சூரி, ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தற்போது ZEE5 ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் காதலில் தோல்வியடைந்து அதன் கதையையே படமாக்க நினைக்கும் ஒரு இளைஞனை மையமாகக் கொண்டது. விஷ்ணு விஷால் மற்றும் மிதிலா பால்கர் நடித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ட்ரெண்டிங் திரைப்படம் யூடியூப் வாழ்க்கையின் நிஜமான பக்கங்களை வெளிப்படுத்துகிறது. கலையரசன் நடித்த இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்வைக்கு கிடைக்கிறது.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மாய சபா என்ற வெப் தொடரும் இந்த வாரம் சோனி லிவ் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. 1970-80 கால அரசியல் சூழலைக் காட்டும் இந்த தொடரில், நண்பர்கள் எதிரிகளைப் போல் மாறுவது எப்படி என்பது கூறப்படுகிறது.
அரேபிய காதலி வெப் தொடரில் பாகிஸ்தான் எல்லையை தவறுதலாக கடக்கும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லப்படுகிறது. சத்யா தேவ் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள இந்த தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், பிரபலமான Wednesday வெப் தொடரின் இரண்டாவது சீசனும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் இத்தொகுப்பை காண முடிகிறது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் குடும்பம், காதல், அரசியல், சஸ்பென்ஸ் என பல்வேறு வகைகளை கொண்டிருப்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.