கேரளா: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி, 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது 73 வயதாகும் அவர், இன்னும் பல்வேறு புதிய கதையம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ரமலான் மாதம் என்பதால், மம்மூட்டி நோன்பு இருந்து வருகிறார். இதைத் தொடர்ந்து, சில மலையாள ஊடகங்களில் “மம்மூட்டிக்கு புற்றுநோய்” என பரபரப்பு தகவல் வெளியானது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்துள்ளார். அவர் “மம்மூட்டி நலமாக இருக்கிறார். நோன்புக்காலம் முடிந்ததும், விரைவில் மோகன்லாலுடன் இணைந்து அவரது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்” என உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், மம்மூட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் பனம்பிள்ளி நகரில் மம்மூட்டி வசித்த நான்கு அறைகள் மற்றும் ஹோம் தியேட்டர் வசதி கொண்ட வீடு, தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட உள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி முதல், இந்த வீட்டில் முன்பதிவு செய்துகொண்டு தங்கிக்கொள்ளலாம். ஒரு நாள் தங்கும் வாடகை ரூ.75,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி வாழ்ந்த வீடு ரசிகர்களுக்கு அனுபவிக்கக்கூடிய இடமாக மாற்றப்படுவது அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.