மும்பையில் நடைபெற்ற ‘ஜுக்னுமா’ திரைப்படத்தின் பிரீமியர் விழா ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் தருணங்களை தந்தது. ராம் ரெட்டி இயக்கிய இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் விழாவின் முக்கிய அம்சமாக அவர் நடிப்பை விட, நிகழ்ச்சியில் நடந்த அன்பும் மரியாதையும் நிரம்பிய சம்பவங்களே பேசப்பட்டன.

விழாவில் நடிகர்கள் ஜெய்ஜீப் அஹ்லாவத், விஜய் வர்மா மற்றும் அனுராக் காஷ்யப் ஒருவர் பின் ஒருவராக மனோஜ் பாஜ்பாயின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். இதனால் மனோஜ் உணர்ச்சிவசப்பட்டு, தனது நெருங்கிய நண்பரான அனுராக் காஷ்யப்பை சிரிப்புடன் ஒரு அடியும் வைத்தார். ‘தி ஃபேமிலி மேன்’ தொடரில் இணைந்து நடித்த ராஜ் நிடிமோரும் இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக கலந்து கொண்டார்.
மனோஜ் மற்றும் அனுராக் இடையேயான நட்பு 90களில் தொடங்கியது. ‘சத்யா’ படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்தபோது, அனுராக் காஷ்யப் எழுத்தாளராக பணியாற்றியிருந்தார். பின்னர் ‘கேங்க்ஸ் ஆஃப் வசேபூர்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய இருவருக்கும் இடையே சில தவறான புரிதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் சமீபத்திய பேட்டியில் மனோஜ், அவை சிறிய விஷயங்கள்தான் என்றும், அனுராக் தனது சிந்தனையும் உறுதியாலும் பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்றும் பாராட்டினார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதை நட்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடாகக் கருதுகின்றனர். ‘ஜுக்னுமா’ படத்தின் பிரீமியர் ஒரு சாதாரண திரையிடல் அல்லாது, பாலிவுட் கலைஞர்களின் இணைப்பு மற்றும் பரஸ்பர அன்பை வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ரசிகர்களுக்கு இது உண்மையான கொண்டாட்டமாக மாறியது.