கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்த சம்பவம் அரசியல் சதித்திட்டத்தின் விளைவாக ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.
மன்சூர் அலிகான், “விஜய்யின் வளர்ச்சி சில அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை. அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கலாம். ஆனால், கூட்டத்தில் வந்த அப்பாவி மக்களை இழப்பதற்கு காரணமானவர்கள் அயோக்கிய அரசியலை செய்து விட்டார்கள்” எனக் கூறினார். மேலும், காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததும், முட்டு சந்தில் கூட்டம் நடத்த அனுமதி அளித்ததுமே உயிரிழப்புகளுக்குக் காரணம் என சுட்டிக்காட்டினார்.

“கரூர் என் சொந்த ஊர், அங்கு மக்கள் அடிபட்டு, மிதிபட்டு இறந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதே வேதனையாக உள்ளது. இந்த அரசியல் எனக்கு அவமானமாக உள்ளது” என்று கண்கலங்கினார். அதோடு, விஜய்க்கு தானே முழு ஆதரவு என்றும், அவர் மீது நடக்கும் சதி அரசியல் விரைவில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
அவரது பேட்டியில், “இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. மக்கள் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். இப்போது நடக்கும் சதி அரசியல் நீண்ட நாட்கள் செல்லாது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க யாராலும் முடியாது” எனக் குறிப்பிட்டார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கள் தற்போது பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.